பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தல விவகாரம் | பேருந்து மீதேறி அடாவடி! - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பேருந்து மீது ஏறி அடாவடி செய்த விவகாரம் தொடர்பாக, 2 காவல் நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூட்டு தல விவகாரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து மீது ஏறி அடாவடி செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 5-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல பிரச்சனையில் ஈடுபட்டு பஸ்ஸின் மீது ஏறி ஆட்டம் போட்ட அதை வீடியோவாக வெளியிட்டனர்.
பிராட்வே to பூந்தமல்லி ரூட் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ரூட்டு தல விவகாரத்தில் சாலையின் நடுவே நாட்டு பட்டாசு கொளுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தினர். மேலும் பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன் சாலையின் சென்ற பயணிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்தனர்.
கல்லூரி மாணவர்கள் பேருந்தை நிறுத்தி பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டதும், கல்லூரியின் குறுக்காக நின்று சாலை மறியலை ஏற்படுத்தியதும், சாலையின் நடுவே பட்டாசு வெடித்து போக்குவரத்தைத் தடுத்ததுமான செயல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பேருந்து மீது ஏறி அடாவடி செய்த விவகாரம் தொடர்பாக, 2 காவல் நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீடியோவில் உள்ள மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.