For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பாணியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் திருட்டு!

04:07 PM Nov 24, 2023 IST | Web Editor
 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்  பாணியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் திருட்டு
Advertisement

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்பட பாணியில் லண்டனில் விலையுயர்ந்த கார் வகைகளில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடப்பட்டுள்ளது.

Advertisement

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் இப்போது அடைந்திருக்கும் உயரத்துக்கு முக்கிய காரணம்,  அது வழங்கும் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள பல்வேறு விதமான ஆப்ஷன்களை ரோல்ஸ்-ராய்ஸ் வழங்குகிறது. இதனாலேயே, பல ஆண்டுகள் கடந்த போதிலும், ரோல்ஸ்-ராய்ஸ் கார் மீதான ஈர்ப்பு அப்படியே உள்ளது.

இந்த நவீன கார்களைத் திருடுவது என்பது மிகப்பெரிய சவால்.  ஆனால் அப்படி ஒரு விலையுயர்ந்த காரைக் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட பாணியில் 30 விநாடிகளில் எளிதாகத் திருடிய சம்பவம் லண்டனில் அரங்கேறியுள்ளது.  விலையுயர்ந்த வகை கார்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கு குறை இருக்காது என்பதை பொய்யாக்கும் வகையில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

லண்டனின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த காரை வெறும் 2  பேர் மட்டும் சேர்ந்து நவீன முறையில் திருடியுள்ளனர்.  அதிகாலை 4 மணியளவில் வந்த 2 திருடர்களில் ஒருவர் காருக்குள் இருக்க,  மற்றொருவர் கையில் ஒரு ஆன்டனாவை உயரத் தூக்கிக் காட்டியபடி வெளியே நிற்கிறார்.  சில நொடிகளில் கார் ஸ்டார்ட் ஆகிவிட இரண்டு திருடர்களும் அந்தக் காரில் பறந்து சென்றுவிடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இப்போது, விலையுயர்ந்த கார்களில் உள்ள ஒரு பாதுகாப்பு சிறப்பம்சம்தான் இந்தத் திருட்டில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை 'ரிலையிங்' என அழைக்கிறார்கள். சமீபகாலமாக அதிகமான கார்கள் திருடுபோவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திருடப்படும் கார்கள் மத்திய கிழக்குப் பகுதிகளுக்குக் கடத்தப்படுவதாகவும், திருடப்பட்ட காரைக் கண்டுபிடிக்க முயற்சி நடந்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரின் உரிமையாளர் சாவியுடன் காரிடம் நெருங்குகையில்,  சாவியிலிருந்து வரும் சிக்னலைக் கார் பெறுகிறது.  பின் தானாகவே திறந்துவிடுகிறது.  அந்த அம்சத்தினடிப்படையிலேயே இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது.  காரின் சாவி வீட்டிற்குள் தூரமாக இருந்தாலும் திருடர்களின் ஆன்டனா அந்த சாவியில் இருந்து வரும் சிக்னலைப் பெற்று காருக்கு அனுப்பியுள்ளது.  இதனால் கார் தானாக திறந்து, ஸ்டார்ட் ஆகிவிட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
Advertisement