ரோகித், சூர்யகுமார் அதிரடி... 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் ராகுல் திரிபாதிக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே அறிமுக வீரராக இடம் பிடித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - ஷேக் ரஷீத் களமிறங்கினர்.
இதில் ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, களம் கண்ட அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் வெறும் 15 பந்துகளில் 32 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். ஷேக் ரசீத் 19 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் ஜடேஜா - ஷிவம் துபே ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர். இதில், ஷிவம் துபே 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தோனி 4 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா இறுதி வரை களத்தில் இருந்து ரன்களை சேர்த்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 53 ரன்களுடனும், ஓவர்டான் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரயான் ரிக்கெல்டன் - ரோகித் சர்மா களமிறங்கினர். இதில், ரயான் ரிக்கெல்டன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சூர்யகுமார் யாதவுடன், ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ரன்களை குவித்தனர்.
இறுதியில் மும்பை அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.