புதிய சாதனையுடன் ஒருநாள் போட்டிகளில் 32வது சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி கடந்த 6ம் தேதி நாக்பூரில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஒடிசாவில் உள்ள கட்டாக் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி வந்தனர். இதில் 30 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதத்தை கடந்திருந்தார். இதையடுத்து சுப்மன் கில் 60 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய விராட்கோலி, 5 ரன்களில் அவுட்டானார்.
தொடக்கத்தில் இருந்து பொறுப்புடன் விளையாடி வந்த ரோகித் சர்மா 90 பந்துகளில் பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தனது 32வது சதத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் இப்போட்டியில் 7 சிக்ஸர் அடித்துள்ள நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 334 சிக்ஸர்களுடன் இருந்த கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் 351 சிக்சர்களுடன் ஷாகித் அப்ரிடி நீடிக்கிறார்.