#BCCI செயலாளராகிறாரா ரோகன் ஜெட்லி? இவர் யார் தெரியுமா?
பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பிசிசிஐ தலைவராக ரோகன் ஜெட்லி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
ஐசிசியின் தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியுள்ளது. 2 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் 3 முறை வகிக்கலாம். கிரெக் பார்க்லே தொடர்ந்து 2 முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், 3-வது முறை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது. ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள். ஆனால் இன்றுவரை ஜெய்ஷா வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஒருவேளை இன்று ஜெய்ஷா வேட்புமனு தாக்கல் செய்தால், அவர் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டால், பிசிசிஐ அடுத்த தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லீ தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரோகன் ஜெட்லீ உள்ளார்.