ரோபோ சங்கர் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
இதனிடையே சில நாட்களுக்கு முன் படப்பிடிப்புதளத்தில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் திரு. ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.