அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 267வது போப்பாக தேர்வு!
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது. 88) மறைவுக்கு பிறகு. அவரது உடல் அவரின் விருப்பத்திற்கேற்ப ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிய போப் தேர்வு செய்யப்படுவதற்கான கான்க்ளேவ் மாநாடு நடத்தப்பட்டது.
ரகசியமாக நடத்தபட்ட இந்த கான்க்ளேவ் மாநாட்டில் உலக முழுவதிலும் இருந்து 133 கார்டினல்கள் வாக்கெடுப்புக்காக வாடிகனுக்கு வந்தனர். அதன் பின்பு கடந்த 7 ஆம் தேதி கான்க்ளேவ் தொடங்கி நேற்றிரவு வரை நடைபெற்றது. இதில் இரண்டு முறை சிஸ்டைன் தேவாலய சிம்னியில் இருந்து கரும்புகை வெளியானது. தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில்(இந்திய நேரப்படி) சிம்னியில் இருந்து வெண்புகை வெளியானது. வெண்புகை என்பது புதிய போப்பை தேர்வை குறிக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 69 வயதான ராபர்ட் பிரிவோஸ்ட் 267வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிஸ்டைன் தேவாலயத்தில் இருந்து அங்கு கூடியிருந்த ஏராளமான கத்தோலிக்க திருச்சபையார் முன்பு தோன்றி கை அசைத்து சென்றார். கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராபர்ட் பிரிவோஸ்ட் தன்னை போப் 14ம் லியோ என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.