ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை - கோவையில் அதிர்ச்சி!
கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையான, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுகாஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நகைக்கடைக்கு வந்த மர்ம நபர், 100 சவரன் அளவிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அத்துடன் காவல் துறையினர் தற்போது தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையில் புகுந்து கொள்ளையடித்தது யார்? என்ற விசாரணையில், சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிகழ்விடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. மேலும், மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரவு 12 ஒரு மணி அளவில் ஒரு நபர் உள்ளே நுழைந்து ஆங்காங்கே ஆபரணங்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இன்று காலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இங்கேயே 12 தங்கி உள்ளார்கள். யாரும் பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார்கள். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 100-லிருந்து 150 சவரன் நகைகள் கொள்ளை போயிருக்கலாம்.
அனைத்து சிசிவிடி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். ஒருவர் முகமூடியை அணியவில்லை. இதுவரை யார் என்பது தெரியவில்லை. வெளியூர் நபராக தெரியவில்லை. குற்றவாளியின் நடவடிக்கை வித்தியாசமாக உள்ளது. 12.30 முதல் 1 மணி வரைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.