ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரில் சாலை - சென்னை மாநகராட்சி ஒப்புதல்!
இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
பார்டர் - காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் சென்ற அஸ்வின், 3-வது போட்டி முடிவில் திடீரென்று ஓய்வை அறிவித்து நாடு திரும்பினார்.
106 டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள், இஷதில், 37 முறை 5 விக்கெட்டுகள், 8 முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அஸ்வின் தற்போது 2025 ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை அளித்த அஸ்வினுக்கு கடந்த ஜனவரி மாதம் பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் அஸ்வின் வசித்து வரும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணபுரம் 1-வது தெருவிற்கு ‘ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை’ என பெயர் சூட்ட சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கார்த்திக் என்பவர் சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு சென்னை மாநகராட்சியும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.