கனமழையால் சேதமடைந்த சாலை; சீரமைத்த போக்குவரத்துத்துறை போலீசாருக்கு குவியும் பாராட்டு!
பூவிருந்தவல்லியில் மழையால் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாத நிலையில், போக்குவரத்து போலீசாரே சாலையை சீரமைத்தது பாராட்டுகளை பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் பூவிருந்தவல்லி சுற்றுவட்டத்தில் பல்வேறு சாலைகள் சிதலமடைந்தன. குறிப்பாக பூவிருந்தவல்லி ட்ரங் சாலையில் நீதிமன்றம் முன்பாகவும், ஆவடி- பூந்தமல்லி சாலையில் சென்னீர்குப்பம் பகுதியிலும் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
அதேபோல் கரையான் சாவடி சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகள் சிதலமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், போக்குவரத்து ஆய்வாளர் சந்திரமவுலி தலைமையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அருகே உள்ள சிறிய கற்களைக் கொண்டு வந்து பள்ளங்களை மூடி நிரப்பினர். பூவிருந்தவல்லி நீதிமன்றம் முன்பாகவும், சென்னீர்குப்பம் கரையான் சாவடி
உள்ளிட்ட சந்திப்புகளிலும் ஏற்பட்ட ராட்சத பள்ளங்களை போக்குவரத்து போலீசாரே
துரிதமாக செயல்பட்டு மூடினர். இதனால் போக்குவரத்து நெரிசலும் கட்டுக்குள்
வந்தது. போக்குவரத்து போலிசாரின் இந்த செயல் வாகன ஓட்டிகள் இடையே நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியது.