அமேசானில் 13 கிலோ மீட்டருக்கு சாலைப் பணி... அழிக்கப்படும் காடுகள் - பொதுமக்கள் வேதனை!
பிரேசிலில் உள்ள பெலெம் நகரத்தில் ஐநாவின் COP30 காலநிலை உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. நடப்பாண்டு நவம்பர் 10 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற இந்த மாநாட்டில் 50,000 -க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்குபெற உள்ளனர்.
மாநாட்டில் பங்குபெறுபவர்களுக்கு போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாதுகாக்கப்பட்ட அமேசான் மழைக்காடுகளில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் வரை மரங்களை வெட்டி அவெனிடா லிபர்டேட் என்று அழைக்கப்படும் நான்கு வழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மழைக்காடுகள் கார்பனை உறிஞ்சுவதிலும், பல்லுயிர் பெருக்கத்தை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நெடுஞ்சாலை திட்டம் குறித்து பிரேசில் அரசாங்கம், அத்தியாவசிய திட்டமாகக் கருதி வரும் நிலையில், மழைக்காடுளை அழிப்பது உச்சிமாநாடு நிலைநிறுத்த விரும்பும் கொள்கைகளுக்கு முரணானது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும் அங்குள்ள உள்ளூர் வாசிகள் மற்றும் வன நல மருத்துவர்கள் மரங்கள் வெட்டப்படுவது வனவிலங்குகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக வேதனையுடன் குற்றம் சாட்டி வருகின்றனர்.