சாக்ஷி மாலிக்கின் முடிவு வருத்தம் அளிக்கிறது: ரித்திகா சிங் வேதனை!
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் முடிவுக்கு நடிகை ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கு பெற்று, 62 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் ஏராளமான சர்வதேச பதக்கங்களை இந்தியாவிற்காக பெற்றுள்ளார். நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல்ரத்னா விருது உள்ளிட்டவற்றை வழங்கி இந்திய அரசு சாக்ஷியை கௌரவித்திருந்தது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். முன்னணி வீராங்கனைகளிடம் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட்டு அவர் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். இந்நிலையில் புதிய தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிரிஜ் பூஷனின் உதவியாளர் என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக மல்யுத்த வீரர்கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியதாவது,
"புதிய தலைவராக ஒரு பெண் தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண் கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உதவியாளரை தான், தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.
மேலும் தான் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக கண்ணீருடன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகையும் குத்துச்சண்டை வீராங்கனையுமான ரித்திகா சிங் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் கூறியதாவது:
"வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த சாக்ஷி மாலிக் இவ்வளவு ஆண்டுகள் கடின உழைப்பினை, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு 'நான் விலகுகிறேன்' எனக் கூறுவது பேரழிவானது. தற்போதும், போராட்டத்தின் போதும் சாக்ஷி மாலிக் எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது" எனப் பதிவிட்டுள்ளார்.