"ரிஷப் பந்த் தொடர்ந்து 3வது வீரராக களமிறங்குவார்!" - பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த் தொடர்ந்து 3வது வீரராக களமிறங்குவார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் 8வது போட்டி இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இரு அணிகளும், இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் களமிறங்கின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கரேத் டெலானி 26, ஜோஷ் லிட்டில் 14, கர்டிஸ் காம்பர் 12, லார்கன் டக்கர் 10 ரன்கள் எடுத்தனர். இவர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.
இந்திய பவுலர்களில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் , ஐஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். எளிய இலக்கை விரட்டிய இந்தியா 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 52, ரிஷப் பண்ட் 36 ரன்கள் அடித்தனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த் தொடர்ந்து 3வது வீரராக களமிறங்குவார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். போட்டி நிறைவடைந்த பிறகு இது தொடர்பாக அவர் பேசியதாவது, "ரிஷப் பந்த் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். பயிற்சி ஆட்டம் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டி என இரண்டிலுமே சிறப்பாக விளையாடினார்.
தற்போது இந்திய அணியில் 3வது வீரராக ரிஷப் பந்த் தொடர்ந்து களமிறங்குவார். அவர் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பது அணிக்கு உதவியாக இருக்கிறது. ஹார்திக் பாண்டியாவும் சிறப்பாக செயல்படுகிறார். பயிற்சி ஆட்டத்தின் போதும் அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவர் 4 ஓவர்களை முழுவதும் வீசும் அளவுக்கு முழு உடல்தகுதியுடன் உள்ளார்" என்றார்.