ஹோலி பண்டிகையின்போது வெடித்த கலவரம் - மேற்கு வங்கத்தில் இணைய சேவை முடக்கம்!
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள சைந்தியா நகரப்பகுதியில் ஐந்து கிராம பஞ்சாயத்தை சேர்ந்த இரு மூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவர சூழல் உருவானது. ஹோலி பண்டிக்கையின்போது ஏற்பட்ட இந்த மோதலில் கற்களை வீசி இரு சமூகத்தினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல்துறையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர லேசான தடியடி நடத்தி 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் வதந்தி மற்றும் சட்ட விரோத நடவடிக்கையை தடுக்க வருகிற மார்ச் 17ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஜார்க்கண்ட்டின் கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பல கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து துணைப்பிரிவு காவல் அதிகாரி ராஜேந்திர பிரசாத், அமைதியை மீட்டெடுக்க போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் நிலைமை கட்டுக்குள் உள்ளது தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.