டெல்லி சட்டப்பேரவையில் அமளி | அதிஷி உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!
டெல்லி சட்டப் பேரவைக் கூட்டம் நேற்று (பிப்.24) தொடங்கியது. பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமையில் சட்டப்பேரவையில் பதவியேற்றனர். 2வது நாளான இன்று, முந்தைய ஆம் ஆமி கட்சி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கைகளை பாஜக அரசு தாக்கல் செய்வதற்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி, முன்னாள் டெல்லி அமைச்சர் கோபால் ராய் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை சபாநாயகர் விஜேந்தர் குப்தா இன்று ஒருநாள் இடைநீக்கம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதால் சபாநாயகர் தங்களை இடைநீக்கம் செய்ததாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ஆதிஷி கூறும்போது, “முதலமைச்சர் அலுவலகத்திலும், அமைச்சர்கள் அலுவலகத்திலும் அம்பேத்கரின் உருவப்படத்தை பாஜக மாற்றியுள்ளது. அம்பேத்கரை விட பிரதமர் மோடி பெரியவரா? அம்பேத்கரின் உருவப்படம் அதன் இடத்தில் வைக்கப்படும் வரை நாங்கள் அதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.