வங்கக்கடலில் உருவானது ‘ரிமல்’ புயல்!
மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருமாறியது.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22 ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை புயலாக வலுபெறும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று தாமதமாக தற்போது வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது.
கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, சூறாவளி புயலாக தீவிரமடைந்து இன்று 5:30 மணி அளவில் மையம் கொண்டிருந்தது.
இது நாளை நள்ளிரவில் வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரை, சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.
இந்த புயலால் மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.