#RHUMI1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டுக்கான ராக்கெட்டான ரூமி1 ராக்கெட் சென்னை அருகே வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமங்கள் சார்பில் மறுபயன்பாட்டுக்கான 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் மூலம் 'ரூமி 1' என்ற ராக்கெட்டை உருவாக்கியது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 'மிஷன் ரூமி 2024' என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே தாயரிக்கப்பட்ட முதல் மறுபயன்பாட்டுக்கான 'ரூமி 1' ராக்கெட் 3 கியூப் செயற்கைக்கோள்களுடன் மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி நடமாடும் ஏவுதளம் மூலமாக ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டானது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்திலிருந்து இன்று(ஆக 24) விண்ணில் ஏவப்பட்டது.
3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட், வானில் 80 கி.மீ உயரத்தில் பறக்கக்கூடியது. இதில் காஸ்மிக் கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு, காற்றின் தரம், வளிமண்டல மாற்றங்களைக் கண்காணிக்கவும், அவை தொடர்பான தரவுகளை சேகரிப்பதற்காக 3 கியூப் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டில் நவீன தொழில்நுட்பத்திலான திரவ ஆக்சிஜன் மற்றும் திட எரிபொருள் உந்து சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. பாராசூட் டிப்ளோயர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அதன் செயல்திறனை மேம்படுத்துவதுடன் செயல்பாட்டு செலவுகளையும் வெகுவாகக் குறைக்கிறது. அதிர்வலைகள், ஓசோன் அளவுகள், காற்றின் நச்சுத் தன்மை, வளிமண்டல நிலைகளை அறிந்து கொள்வதற்காக 50 சிறிய ஆய்வுக் கருவிகளும் அனுப்பப்பட்டு உள்ளன.
இவை சுற்றுச்சூழல் குறித்த புரிதலை மேலும் மேம்படுத்த உதவும். திட்டமிட்ட பாதையில் அவற்றை நிலைநிறுத்திய பிறகு 'ரூமி 1' ராக்கெட் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டுக்கான ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.