தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி! ஏன் தெரியுமா?
“எஸ்சி, எஸ்டி மக்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நிலுவையில் உள்ள பட்டியலின, பழங்குடியினருக்கான 581 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில், நிலுவையில் உள்ள எஸ்.சி.எஸ்.டி. மக்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, கடந்த மாதம் 7-ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை புரட்சி பாரதம் கட்சி நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் வன்முறைகள் குறித்தும், அரசு அதிகாரங்களில் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
புரட்சி பாரதம் கட்சியின் இந்த மாபெரும் போராட்டத்தின் விளைவாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாகவும் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை வரவேற்கின்றோம்.
நேரடி நியமனங்களில் சமூக நீதியை நிலைநாட்ட டிஎன்பிஎஸ்சியின் குரூப்-1, குரூப்-2, 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் மூலம் 581 பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு, இந்த அறிவிப்பை வெறும் தகவலோடு நிறுத்தி கொள்ளாமல், செயல்படுத்த வேண்டும் எனவும் புரட்சி பாரதம் கட்சி வலியுறுத்துகிறது.
புரட்சி பாரதம் கட்சியின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கும் இதே வேளையில், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான பிரச்னைகளுக்கு தலைவர், புரட்சியாளர், பூவை, மூர்த்தியார் வழியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.