அமைச்சர் #SenthilBalaji-ன் ஜாமீனை ரத்து செய்யகோரிய மறுசீராய்வு மனு தள்ளுபடி!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யகோரிய மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் 471 நாள் சிறைக்கு பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முன்பு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது.
இந்த சூழலில், பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதை ரத்து செய்யக்கோரி பாலாஜி சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு நேற்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில், "செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்வதற்கான சூழல் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த உத்தரவில் எவ்வித தவறுகளும் இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், அதை பொதுவெளியில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது" என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.