திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
இன்றுமுதல் செப்டம்பர் மாத இறுதிவரை திருப்பதி மலை பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேர கட்டுப்பாடு விதித்து தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் வனவிலங்குகள் குட்டிகளை ஈன்று ஆவற்றிற்கு
பாலூட்டும் காலம் ஆகும். இரவு நேரத்தில் வேட்டைக்கு செல்லும் வனவிலங்குகள் குட்டிகளை தூக்கி செல்வது அல்லது உடன் அழைத்து செல்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுவது வழக்கம்.
குட்டிகளுடன் செல்லும் வனவிலங்குகளை நெருங்கி யாராவது சென்றால், அவர்கள் மீது
அவை கொடூர தாக்குதலை மேற்கொள்ளும். எனவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுக்க இன்று முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை காலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் இரு சக்கர வாகனங்களில் திருப்பதி மலைப்பாதைகளில் பயணிக்கலாம்.
இந்த நாட்களில் காலை 6 மணிக்கு முன்னதாகவோ அல்லது இரவு 9 மணிக்கு பின்னரோ
இரு சக்கர மோட்டார் வாகனங்களில் திருப்பதி மலையில் பயணிக்க அனுமதி இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.