டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் - உச்சநீதிமன்றம்!
தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களை கொண்டு தயார்செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு, தலைநகர் டெல்லியிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் காற்று மாசினைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தனது மனுவில், ’தீபாவளி உள்ளிட்ட விழாக் காலங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி தொடரப்பட்ட இந்த பொது நல வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் முக்கிய ஆணை பிறப்பித்தது. அதில், பேரியம் நைட்ரேட் மற்றும் தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும், பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. மேலும், 2021-ம் ஆண்டில், பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற தனது முந்தைய ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகள் தடை கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, மாசுப்படுத்தும் பட்டாசுகள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய ஆணைகள் டெல்லிக்கு மட்டுமல்லாமல் நாடு முழுமைக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தது. சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும் என்று தெரிவித்த நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.