தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க தீர்மானம் நிறைவேற்றம்!
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரை சீரமைப்பு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்தாம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களின் உரையாடலுக்கு, பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்கக்
கோரி தீர்மானம நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும், இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக ஒரு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஒருமனதாக தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.