சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட ஆதரவாகவும் எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றம்...!
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சீட்டு வழங்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்தைக் காங்கிரஸிலிருந்து நீக்க வலியுறுத்தியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் எம்பி சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மோடிக்கு நிகரான தலைவர் அல்ல ராகுல் காந்தி என கூறிய கார்த்தி கட்சியில் இருக்க கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 9ஆம் தேதி பிரதமர் மோடியுடன் ஒப்பிடும் போது, அவருக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி அல்ல என கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்தது சர்ச்சையைக் கிளப்பியது.
அதே சமயம், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தனியார் மஹாலில் தேர்தல் பொறுப்பாளர் அருள் பெத்தையா தலைமையில் நடைபெற்ற சிவகங்கை, மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கார்த்தி சிதம்பரமே போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.