மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகலா? சுரேஷ் கோபி விளக்கம்!
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சுரேஷ் கோபி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, 4.12 லட்சம் வாக்குகள் பெற்று, 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு பாஜக எம்பி சுரேஷ் கோபி என்பதால், அவருக்கு அமைச்சர் பதவியை பாஜக தலைமை கொடுத்தது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு (09.06.2024) மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பிறகு மலையாள ஊடக ஒன்றிற்கு பேட்டி அளித்த சுரேஷ் கோபி, தான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதால், அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்று கட்சித் தலைமையிடம் கூறியிருந்ததாகவும், கட்சித் தலைமை கூறியதால் பதவியேற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக செய்திகள் பரவின.
மேலும், அவரது கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து கட்சித் தலைமை விரைவில் விடுவிக்கும் என்று நம்புவதாகவும், எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவதாகவும் கூறப்பட்டன.
இந்நிலையில், சுரேஷ் கோபி தனது முகநூல் பக்கத்தில், “நான் அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக தவறான செய்தி பரவி வருகின்றது. இது முற்றிலும் தவறானது. மோடியின் தலைமையின்கீழ் கேரளத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.