ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி எப்போது தொடங்கும்?
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 500 பயணிகள் மூன்றாவது நாளாக சிக்கி தவிக்கின்றனர். நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இதனால், டிசம்பர் 17- ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்தது. ஆனால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதில் தாமதம் நீடிக்கிறது. காலை 6 மணி முதல் ஹெலிகாப்டர் இறங்க முடியாமல் ரயில் நிலையம் பகுதியில் சுற்றி வருவதாகவும், ரயில் நிலையம் பகுதியில் உணவு பொட்டலங்களை வழங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிடும் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.