For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு - அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

12:01 PM Jun 21, 2024 IST | Web Editor
விஷச்சாராய வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரிய வழக்கு   அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Advertisement

விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 49 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து இன்று (ஜூன் 21) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பினர். கடந்த 2023-ம் ஆண்டு மரக்காணத்தில் இதே போல் விஷச்சாராயம் அருந்தி உயிரிழப்புகள் நடந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக விஷச்சாரயத்தை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 

அரசின் உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் ஏற்கனவே இதே போல் மரணம் நடந்ததை தடுக்க தவறியதற்கு எந்த அதிகாரிகள் பொறுப்பு? இது மற்ற வழங்குகள் போல் எடுத்துக் கொள்ள முடியாது, இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு. மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது? என கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு மனுதாரர் இன்பதுரை தரப்பில், “கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதில் தமிழ்நாடு அரசு, காவல்துறை, வருவாய் துறை, மதுவிலக்கு துறை தோல்வி அடைந்து விட்டது. மெத்தனால் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்டு கள்ளச்சாரயம் தயாரிக்கப்படுகிறது. இதை காவல்துறை தடுக்கவில்லை. இரு மாநில பிரச்னை என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு சார்பில், “கள்ளச்சாரயம் அருந்தியதில் இதுவரை 117 பேர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் ஜுப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 47 பேர் உயிரிழந்துள்ளனர். 89 பேருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது” என விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கள்ளச்சாராய வழக்கு தொடர்பான விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும், அன்றைய தினம் கள்ளச்சாரய உயிரிழப்புகள், அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement