”தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
நெல்லையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”நெல்லையில் கடந்த 5 ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ராபின்சன் என்னும் இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்துள்ளனர். இதனையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இல்லை. டெங்குவால் இந்த ஆண்டில் இதுவரை 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2012 மற்றூம் 2017ம் ஆண்டுகளில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, மயிலாடுதுறை உட்பட தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருமல் மருந்து காரணமாக குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
”சந்தேகத்துக்குரிய அந்த மருந்தினை உடனடியாக விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் தேதி அந்த நிறுவனம் உற்பத்தி செய்வதற்கு தடை விதித்து உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை ஏன் மூடக்கூடாது என சோக்காஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்குள் பதில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.