'குடியரசு தினவிழா' - தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
நாட்டின் 76-வது குடியரசு தின விழா நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொண்டார். தொடர்ந்து குடியரசு தின விழாவில் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு கடமைப்பாதையில் தொடங்கி இந்தியா கேட் பகுதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதக்கங்களை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.