“மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை கொளத்தூரில் அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற இந்த பெரியார் மருத்துவமனை ஒரு மைல் கல். இந்த மருத்துவமனையை உருவாக்க முழுமூச்சுடன் ஈடுபட்ட அமைச்சர்களுக்கு இந்த தொகுதி மக்கள் சார்பாக நன்றி. மருத்துவமனைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என சேகர் பாபு என்னிடம் கேட்டபோது, பெரியார் நகரில் இருப்பதால் அவரின் பெயரையே வைக்கலாம் என்றேன். ஏனென்றால் சமூகத்தில் உள்ள பிணிகளுக்கு மருத்துவம் பார்த்த சமூக மருத்துவர் பெரியார்.
அவரின் பெயரை இந்த மருத்துமனைக்கு சூட்டியதில் அவரின் பேரனாக மகிழ்ச்சியடைகிறேன். கடந்தாண்டு 2023ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மூன்று தலங்கள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினோம். ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்ப இது விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்தாண்டு மார்ச் 7ஆம் நாள் அதற்கான அடிக்கல் நாட்டினோம். இன்று 613 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் 6 அடுக்கு தளங்களில் 560 படுக்கை வசதிகளுடன் புற்று நோய் பிரிவு, இதயநோய் பிரிவு உள்ளிட்ட அனைத்து வித பிரிவுகளுடன் பிரமாண்டமாக இந்த உயர் சிறப்பு மருத்துவமனை உருவாகியிருக்கிறது.
திமுக அரசைப் பொறுத்தவரை கல்வியும், மருத்துவமும் இரு கண்கள். அதனால்தான் புதிய அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாகிறது. அதோடு மட்டுமில்லாமல் நாடு போற்றும் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 போன்ற ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அந்த வகையில் கொளத்தூரில் பெரியார் மருத்துவமனையைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இங்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவம் பார்க்க வருபவர்களை குடும்பத்தில் ஒருவர் போல் பாருங்கள்.அதே போல் மருத்துவமனை சுத்தமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். பொதுமக்கள் சுய ஒழுக்கத்துடன் பொது இடங்களில் தூய்மையைப் பேணி காக்க வேண்டும். ஏனென்றால் இது நம் மருத்துவமனை.
மாற்றுத்திறனாளி என்று பெயர் கொடுத்து நம் சகோதர சகோதரிகளின் சுயமரியாதை காத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரின் வழியில் இந்த பொறுப்பை என் கைகளில் வைத்துக்கொண்டு நிறைய திட்டங்கள் செய்து வருகிறோம். அந்த வரிசையில் மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்க, அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்த ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வருகிற சட்டமன்ற கூட்டுத்தொடரில் அதற்குரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும். இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் இடம் பெறுவது உறுதி செய்யப்படும். அவர்கள் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும். முக்கியமாக விளிம்பு நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறுவார்கள்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.