12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க சட்ட முன்வடிவை பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன். அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. முதலமைச்சர் உரை - கருணை அடிப்படையில் மட்டுமல்ல உரிமை அடிப்படையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்களை தீட்டி வருகிறோம். இந்தியாவிலேயே அதிகளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடம்.
அரசுப்பணி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம் 493 பேர் அரசுப்பணியை பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன கருவிகள் வழங்கும் திட்டம், மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் சிறப்பு மரப்பாதை உருவாக்கியுள்ளோம்.
மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என நான் அறிவித்தேன். 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து சட்டமுன் வடிவை நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த சட்டமுன்வடிவிற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.