வெளிநாடு சென்ற கனடா பிரதமரின் விமானத்தில் பழுது - 3மாதத்தில் 2முறை பழுதானதால் சர்ச்சை.!
விடுமுறைக்காக ஜமைக்கா சென்றிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.
காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா பாராளுமன்றத்திலேயே குற்றம் சாட்டினார். இதனால், இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த சர்ச்சைக்கு நடுவே ஜி20 உச்சி மாநாட்டுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாநாட்டில் பங்கேற்ற நிலையில் அவர் நாடு திரும்பும்போது அவர் செல்ல வேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் சரியாகும் வரையில் அவர் இந்தியாவில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகின.
கனடா பிரதமர் செல்ல வேண்டிய விமானம் இரவு 8 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இயந்திர கோளாறு காரணமாக தாமதம் 36மணி நேரம் கழித்தே புறப்பட்டது. அதுவரை அவர் இந்தியாவில்தான் இருந்தார். CFC001 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை ஒரே நாள் இரவில் சரி செய்து விட முடியாது என்பதால் மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனட பிரதமரின் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள் என இதுதொடர்பாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி, கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார். இந்த் பயணம் முடிந்து ஜனவரி 4ஆம் தேதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜன.3ம் தேதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் ஒரு பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
கனடா பிரதமரின் விமானத்தில் பழுது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதை சரிசெய்வதற்கான குழுவினருடன் மற்றொரு விமானம் ஜமைக்காவுக்குச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பழுது பார்க்கப்பட்ட பின் இரண்டு விமானங்களும் கனடா திரும்பியுள்ளன. கடந்த 3மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.