'ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட தொலைக்காட்சி நிலையம் மீண்டும் திறப்பு' - தலிபான்கள் அறிவிப்பு !
ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகள் மூலம் 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.
பெண்கள் வேலைக்கு செல்வதற்கும், கல்வி கற்பதற்கும் கூட தலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கும் தலிபான் ஆட்சியாளர்கள் உள்ளாகியுள்ளனர். சர்வதேச நாடுகள் தலிபான்களின் ஆட்சியை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையே சமீப காலமாக சர்வதேச உறவை மேம்படுத்த தலிபான்கள் முடிவு செய்துள்ளனர்.
எனவே நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டு தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளனர். ஏற்கனவே, பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.