முத்து மாரியம்மனாக எழுந்தருளிய ரேணுகாம்பாள்... திரளான பக்தர்கள் தரிசனம்!
நவராத்திரி நன்னாளில், ரேணுகாம்பாள் முத்துமாரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பண்டிகை நாடெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களான துர்கா, லட்சுமி, சரஸ்வதியை வழிபட வேண்டும். இவர்களையே கோயில்களில் இச்சா, கிரியா மற்றும் ஞானசக்தி என வழிபடுகிறோம். ஒரு மனிதன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், இந்த மூன்று பெண் சக்திகளின் அருள் நிச்சயம் தேவை என்பது ஆன்மிக நம்பிக்கையாக உள்ளது.
இந்த முப்பெரும் தேவியர்களை வணங்குவதற்காக நவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட்டு
வருகிறது. காஞ்சிபுரத்தில் செங்குந்தர் பூவரசன் தோப்பில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் ஆலயத்தில் இன்று ரேணுகாம்பாள் அம்மனுக்கு முத்துமாரி அலங்காரம் மிக அழகாக செய்யப்பட்டு இருந்தது. அதாவது சுவாமியின் திருமேனி முழுவதும் பச்சை நிறத்தால் வடிவமைக்கப்பட்டு, உடல் முழுவதும் மல்லிகை மொட்டுகளால் முத்துபோல் அலங்கரிக்கப்பட்டு, முறையே திருமுகம், கைகள் மற்றும் கால்களில் மஞ்சள்காப்பு செய்து ரேணுகாம்பாள், முத்துமாரியாக அழகாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முத்துமாரிக்கு கீழே சிரசம்மனுக்கு பல வண்ண நிறங்கள் கொண்ட பட்டு சேலை
அணிவித்து, தங்க கவசம் சாத்தி, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம்
செய்யப்பட்டு இருந்தது. முத்துமாரியாக எழுந்தருளி இருந்த ரேணுகாம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.