புதுப்பிக்கப்பட்ட பாம்பன் பாலம் - அக். 2ல் திறந்து வைக்கிறார் #PMModi
புதுப்பிக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாம்பனில் கட்டப்பட்டுள்ள மண்டபம்-ராமேஸ்வரம் இடையேயான புதிய ரயில் பாலத்தை வருகிற அக்டோபா் மாதம் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 மாதங்களாக, ராமேஸ்வரத்துக்கான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பாலம் திறந்த பின்னர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கவிருக்கிறது.
புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ள நிலையில் இதனோடு சேர்த்து சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கக் கடலின் குறுக்கே சுமார் 2.05 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளுடன் ராமேஸ்வரத்தை ரயில் பாதை வழியாக இணைக்கும் ஒரே பாதையாக இது இருக்கும். நாட்டிலேயே, செங்குத்தாக தூக்கி இறக்கும் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கும் முதல் ரயில்வே பாலம் இதுவாகும்.
இந்த புதிய ரயில் பாலத்தை ரூ.535 கோடி செலவில் ரயில்வே துறை கட்டி முடித்துள்ளது. இந்த பாலமானது, மனிதர்களால் இயக்கப்படும் பழைய பாலத்தை விடவும் 3 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மீனவப் படகுகள் எளிதாக பாலத்தைக் கடந்து செல்ல முடியும். பாலம் கட்டி முடிக்கப்பட்டு, இதில் சோதனை ஓட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் நாள்களில், அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் சோதனை செய்து முடிக்கப்படும்.
பழைய பாம்பன் பாலம், கடந்த 1914ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1988ஆம் ஆண்டு மண்டபம் - ராமேஸ்வரம் இடையே சாலை மேம்பாலம் கட்டப்படும்வரை, நாட்டின் பிற பகுதியோடு, ராமேஸ்வரத்தை இணைக்கும் ஒரே வழித்தடமாக பாம்பன் பாலம்தான் இருந்துள்ளது. பழைய பாம்பன் பாலம் வலுவிழந்துவிட்டதால், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, அது முதல், மண்டபம் ரயில் நிலையத்துடன் ரயில்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.