20 ஆண்டு பழமையான வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணம் உயர்வு - மத்திய அரசு!
டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும் நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலான இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதே போல் 20 ஆண்டுகளுக்கு மேலான இருசக்கர வாகனங்களுக்கு, புதுப்பித்தல் கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.2,000 ஆகவும் மூன்று சக்கர வாகனங்களுக்கு புதுப்பித்தல் கட்டணம் ரூ.3,500 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான செலவு ரூ.20,000 ஆகவும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்களைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ.80,000 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.