கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கப்பட்ட ஆப்கள் - மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு திட்டம்!
கூகுள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே மோதல் எழுந்த நிலையில், அதனை தீர்க்க கூகுள் அதிகாரிகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
தனியார் செயலிகளை பதிவிறக்கம் செய்துகொள்ள கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவைக்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களிடம் இருந்து கட்டண சேவையாக இதுவரை கூகுள் 11% முதல் 26% வரை வசூலித்து வந்தது.
அண்மையில், இந்தக் கட்டணத்தை கூகுள் உயர்த்தி அறிவித்தது. அதன்படி, 15% முதல் 30% வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தக் கட்டணத்தை சில இந்திய நிறுவனங்கள் செலுத்தவில்லை. இதையடுத்து பிரபலமான 10 இந்திய நிறுவனங்களின் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.
இதுகுறித்து கூகுள் வெளியிட்ட அறிவிப்பில், "கட்டணம் வசூலிக்க கூகுள் நிறுவனத்துக்கு எந்த தடையும் எந்த நீதிமன்றங்களும் விதிக்கவில்லை. எங்களுக்கு உரிமையுள்ள தொகையை கேட்டும் இதுவரை தராத நிறுவனங்களின் செயலிகளே நீக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் நேரம் கொடுத்தும் கட்டணத்தை செலுத்த தவறிவிட்டன. எனவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய செயலிகளில் இந்தியாவின் பிரபலமான வேலை தேடுவோருக்கான செயலியான naukri.com, ரியல் எஸ்டேட் சேவைக்கான செயலியான 99acres.com, திருமண சேவைக்கான bharatmatrimony.com மற்றும் shaadi.com உள்ளிட்டவை அடங்கும்.
இந்நிலையில் கூகுள் அதிகாரிகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய அமைச்சர், “கூகுள் தனது அணுகுமுறையில் நியாயமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியா வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டது. எனவே, ஸ்டார்ட்அப் களின் நலன்களைப் பாதுகாப்பது முக்கியம். இவற்றை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.