நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணி - தலைமைச் செயலாளர் பேட்டி!
கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை குறித்து முதலமைச்சர் அம்மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் காணொளி மூலம் கேட்டறிந்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்வதன் காரணமாக, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.
இதையும் படியுங்கள் : தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் - மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!
இந்நிலையில், சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாக துறை மற்றும் உயர் அதிகாரிகள் நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலாளர், மின்சாரத்துறை, நீர்வளத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோரிடம் காணொளி மூலம் பேசினார்.பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்துள்ளதா? மேலும், குடிநீர், பால் விநியோகம் எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டு அறிந்தார்.
அதனை தொடர்ந்து, தூத்துக்குடி எட்டயபுரம் பகுதியில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகங்களில் தங்கவைக்கப்படிருக்கும் பொதுமக்களிடம் காணொளி காட்சி மூலம் பேசினார்"
இவ்வாறு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.