நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
தென் மாவட்ட கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணம் போதாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரூபாய் 1000 நிவாரண தொகையாக வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் 22 பேருக்கு புதிய வகை “கோவிட் ஜே.என்.1” வகை தொற்று உறுதி!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் என்பது இதுவரை வரலாற்றில் நிகழ்ந்திராத பேரிடர் ஆகும். இந்த பேரிடரால் நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகப் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும், அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படுகின்றன. ஏராளமான வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும், மீன்பிடி தொழிலையும் மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்த கனமழை வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துள்ளன. அதே போல் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே இப்போது கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாடு அரசின் நிவாரண உதவி தொகை அறிவிப்பு என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதிப்புகளையும் இழப்புகளையும் கணக்கிட்டு, நிவாரண உதவித் தொகையை பாரபட்சம் இன்றி கூடுதலாக வழங்கிட வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்கள், கால்நடை கடன்கள், தனியார் நிதி நிறுவன கடன்கள் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசே அந்த வீடுகளை மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும்.
அதே போல் இந்த மழை வெள்ளத்தால் வியாபார நிறுவனங்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்களும் மிகப்பெரும் அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஆகவே, வியாபார நிறுவனங்களுக்கும், சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் மானியத்துடன் கடன் உதவிகளையும் அரசு வழங்கிட வேண்டும்"
இவ்வாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.