For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.12,659 கோடி நிவாரணம் தேவை - மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

03:10 PM Dec 14, 2023 IST | Web Editor
ரூ 12 659 கோடி நிவாரணம் தேவை   மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தல்
Advertisement

வெள்ள பாதிப்புகளை சரி செய்ய, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கிட ரூ.12,659 கோடி நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 14) தலைமைச் செயலகத்தில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 5-ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும்,  தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ.5060 கோடி நிதியை விடுவிக்குமாறும் கோரியிருந்தார். அதைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 7-ம் தேதி சென்னை வருகை தந்து, ‘மிக்ஜாம்’ புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தமிழ்நாடு முதலமைச்சருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

 அப்போது மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தெரிவித்து இடைக்கால நிதி உதவி கோரும் கோரிக்கை மனுவினை அளித்து, தமிழ்நாட்டிற்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த மத்திய அரசின் பல்துறை ஆய்வுக்குழு, டிசம்பர் 12 மற்றும் டிசம்பர் 13 ஆகிய நாட்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது.

இன்று (டிசம்பர் 14) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஒன்றிய அரசின் பல்துறை ஆய்வுக் குழுவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் கோரிக்கை மனுவினை (Memorandum) முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசின் ஆய்வுக் குழுவின் தலைவரிடம் வழங்கினார்.

கழிவுகளை அகற்ற வலைத்திட்டத்தின் மூலம் சோதனை மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமி இக்கோரிக்கை மனுவில், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திடவும், மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உட்கட்டமைப்புகளை சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராம சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திடவும் இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளது.

மேலும், மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கு இழப்பீடுகள் வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்திடவும், சாலையோர வியாபாரிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும், தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் நீங்கள் மேற்கொண்ட ஆய்வு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வெள்ளச் சேதத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. அதேபோல் புயல், மழையின் தாக்கத்திற்கு பிறகு, மீட்பு நிவாரண நடவடிக்கைகளும் முழுவீச்சில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டு நீங்கள் தமிழக அரசிற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தீர்கள், அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு காணாத இந்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய சேதங்களை சரிசெய்து மீண்டும் உருவாக்கிடவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரங்கள் மட்டும் போதுமானது அல்ல. ஒன்றிய அரசின் பங்களிப்பும் இதற்கு பெருமளவு தேவைப்படுகிறது.

எனவே, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக உட்கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும் ஒன்றிய அரசிற்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து, தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை பெற்றுத்தர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement