மனைவியின் பிரசவ வீடியோ | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்!
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் பிரசவ வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு ஊரக நலப்பணித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆனநிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் குழந்தையின் முகத்தை முதல்முறையாக காட்டினார்.
தொடர்ந்து தன் யூடியூப் பக்கத்தில் மனைவியின் பிரசவ வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை, இர்ஃபானே வெட்டுகிறார். இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு, ஊரக நலப்பணி துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும் என மருத்துவத்துறை சார்பாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.