பெண் நடத்துநர் பணிக்கு உயர நிபந்தனையில் தளர்வு... புதிய அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டு போக்குவரத்துத் துறையில் பெண் நடத்துநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, அவர்களுக்கான அடிப்படைத் தகுதியில் உயரத்தின் அளவை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசாணையில், பேருந்து நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 சென்டி மீட்டரில் இருந்து 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச உயரம் 160 சென்டி மீட்டர் என்று இருப்பதால் நடத்துநர் பணிக்கு குறைவான பெண்களே தேர்வாவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பால் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கும் நடத்துநர் பணி கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடத்துநர் பணியில் சேர ஆண்களுக்கு 160 சென்டி மீட்டரும், பெண்களுக்கு 150 சென்டி மீட்டரும் உயரம் இருக்க வேண்டும் என விதியில் திருத்தம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடத்துநர் பணிக்கு தேர்வாக குறைந்தபட்ச உடல் எடை 45 கிலோ என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.