மோடியின் அழைப்பை நிராகரித்தாரா #VineshPhogat? - வெளியான பரபரப்பு தகவல்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் வந்த, பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்ததாக காங்கிரஸ் வேட்பாளரும், மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்போது ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வினேஷ் போகத் ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் மல்யுத்த போட்டியின் தகுதி நீக்கத்திற்கு பிறகு வந்த பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்ததாக வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். ஹிந்தி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
பிரதமரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் நான் பேச மறுத்துவிட்டேன். அந்த அழைப்பு எனக்கு நேரடியாக வரவில்லை. அவர் (பிரதமர் மோடி) பேச விரும்புவதாக அங்கிருந்த இந்திய அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். நானும் அவரிடம் பேச தயாராக இருந்தேன். ஆனால் அவர்கள் பல நிபந்தனைகள் விதித்தனர். எனது குழுவில் யாரும் இருக்கக்கூடாது, அதேசமயம் உரையாடலை பதிவு செய்வோம் என தெரிவித்தார்கள்.
எனது மன உணர்ச்சிகளும், கடின உழைப்பும் சமூக ஊடகங்களில் கேலி செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. உரையாடலை வெளியிடுவோம் என்ற நிபந்தனை இல்லாமல் இருந்திருந்தால், அவரின் அழைப்பை நான் பாராட்டியிருப்பேன். அவர் உண்மையிலேயே விளையாட்டு வீரர்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், அவர் அதை பதிவு செய்யாமல் அழைத்திருக்கலாம். அதற்கு நான் நன்றியுள்ளவளாக இருந்திருப்பேன்.
ஒருவேளை அவர் என்னிடம் பேசினால், நான் கடந்த இரண்டு வருடங்களை பற்றி அவரிடம் கேட்பேன் என நினைத்திருக்கலாம்” என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.