இறைச்சிக் கடைகள், வழிபாட்டுத் தல ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு - ம.பி. முதலமைச்சர் உத்தரவு!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மோகன் யாதவ், திறந்தவெளியில் இறைச்சிக்கடைகளை நடத்துவதற்கும், வழிபாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் பதவிக்காலம் முடிந்து பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது. தற்போது மோகன் யாதவ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் உள்ள லால் பரேடு மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மாநிலத்தின் 19வது முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக ஜகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் பதவியேற்றனர்.
மாநில ஆளுநர் மங்குபாய் படேல் அவா்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மூன்று முறை பாஜக எம்எல்ஏவான மோகன் யாதவ், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று போபாலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், திறந்தவெளியில் இறைச்சிக் கடைகள் செயல்படுவதைத் தடுத்து வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயங்கள் அளித்திருக்கும் உத்தரவுகளை பின்பற்றி, இவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக உருவாக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பெருக்கிகளின் ஒலி அளவை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.