தேர்தல் ஆணையர்கள் நியமன புதிய சட்டத்திற்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம்!
தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவே பரிந்துரை செய்யும் நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து உச்ச நீதிமன்றத்தை விலக்கி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம் பெறும் வகையில், மத்திய அரசு அண்மையில் திருத்தம் கொண்டு வந்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியதால், இது சட்டமாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்காக உயர்வு!
இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தங்கள் கூட்டமைப்பு (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது;
பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய குழுவின் பரிந்துரைப்படி, தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை குடியரசுத் தலைவா் நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்குப் பின்னா், நாடாளுமன்றத்தில் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த ஆணையா்களின் நியமனத்தில் அரசு நிா்வாகத்தைச் சோ்ந்தவா்களின் தலையீடு அளவுக்கு அதிகமாக இருக்க மசோதா வழியமைத்துள்ளதுடன், தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்துக்கும் தீங்கு விளைவிக்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக நேற்று (பிப் . 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் தெரிவித்ததாவது:
"தலைமை தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வின் உத்தரவுக்கு மாறாகப் புதிய சட்டம் உள்ளது. அத்துடன் தற்போது பதவியில் உள்ள இரண்டு தோ்தல் ஆணையா்கள் ஓய்வுபெற உள்ளதால், புதிய தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு புதிய சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்தாா்.
அந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா். உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள மறு ஆய்வு அதிகாரத்தின் அடிப்படையில், இந்த விவகாரத்தை ஆராய வேண்டியுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனா்.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் ஏடிஆரின் மனுவும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரலுக்கு ஒத்திவைத்தனா்.