அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை! ஜோ பைடன் அறிவிப்பு!
உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசிக்கும் அகதிகளை அந்நாட்டவர்களை மணந்திருந்தால், நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அதிபா் ஜோ பைடன் தெரிவித்தார்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான அகதிகள் அந்த நாட்டில் உள்ளவரை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் வகுத்துள்ளாா். இது குறித்து வெள்ளை மாளிகை அதிபர் ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
"உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கா்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இன்னும் சில மாதங்களில் அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் அவா்கள் பிற்காலத்தில் நாட்டின் முழு குடியுரிமையைப் பெற முடியும். அவ்வாறு விண்ணப்பிப்பவா்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். அவா்கள் அமெரிக்கா்களை மணந்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால், ஜூன் 17ம் தேதிக்கு பிறகு அமெரிக்கா்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.
அந்த வகையில், ஜூன் 17-ஆம் தேதிக்கு முன்னா் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா் ஒருவரை மணந்து, 10 ஆண்டுகளாக நாட்டில் தங்கியிருக்கும் எந்தவொரு அகதியும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 3 ஆண்டுகளில் அவா்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்காக (கிரீன் காா்டு) விண்ணப்பிக்கலாம்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் :பிரபல பாடகிக்கு ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு! – ஏன் தெரியுமா?
இந்த புதிய திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமாா் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும், பின்னா் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினா்.
இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தோ்தலில், ஆளும் ஜனநாயகக் கட்சி சாா்பில் அதிபா் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சாா்பில் அவருக்கு முன்னா் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனா்.