செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைப்பு!
சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்ததாலும் மழையின் வரத்து குறைந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 6.000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் உபரி நீர் திறப்பது 4,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் உபரி நீர் செல்லும் 5 கண்மாய் மற்றும் 19 கண் மதகுகளை ஆய்வு செய்தார். ஏரியின் நீர் இருப்பு விவரம் மற்றும் உபரி நீர் செல்வது குறித்தும், அணையின் தன்மை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையும் படியுங்கள்: “பிரதர்…. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்க..!” – சமுத்திரக்கனி வலியுறுத்தல்!
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
"சென்னை குடிநீருக்கான தண்ணீர் என்பதால் உபரி நீர் குறைத்தும், அதிகரித்தும் திறந்து வெளியேற்றப்பட்டது. 10,000 முதல் 12,000 கன அடி வரை இருந்தாலும் பிரச்னை இல்லை. 2 ஆண்டுகளில் அடையார் ஆற்றங்கரை முழுவதும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. 12,000 கன அடி திறந்தாலும் சென்னை பாதிக்கப்படாது, யாரும் பயப்பட வேண்டாம். சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்ததாலும், மழையின் தாக்கம் குறைந்ததாலும் உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை குன்றத்தூர், செம்பரம்பாக்கம் பகுதியில் அதிக மழை பொழிந்துள்ளது. அதிகாரிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுமக்கள் பார்வை இடுவது தடுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.