#RedAlert | மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை - விமான சேவை பாதிப்பு!
மும்பையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மாலை முதல் மும்பை, தானே பால்கர் மற்றும் ராய்காட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதி கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது.
இதனைத் தொடர்ந்து மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தியுள்ளது. இடைவிடாது மழை பெய்து வருவதால் தானேவில் உள்ள மும்ப்ரா புறவழிச்சாலையில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வர இருந்த 14 விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்படாததால் வெவ்வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மழை காரணமாக பல ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மும்பையில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.