குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு #RedAlert - #IMD எச்சரிக்கை!
காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மோர்பி மாவட்டத்தில் டிராக்டர் ட்ராலி ஒன்று 7 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த 7 பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிப்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். தெற்கு குஜராத்தில் உள்ள வல்சட், தபி, நவ்ஸரி, சூரத், நர்மதா, பஞ்சமஹாத் போன்ற பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நவ்சாரி மாவட்டத்தில் கேர்கம் தாலுகாவில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தெற்கு குஜராத் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் அப்பகுதியின் ஆண்டு சராசரி மழையைவிட 105% அதிகமாக மழை பொழிந்துள்ளது. குஜராத் உள்துறை செயலாளர் மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு வெள்ள பாதிப்புகளை கையாள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 75 நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அபாய எல்லையை நெருங்கியுள்ளது. 15 நீர்த்தேக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மழை வெள்ள பாதிப்பால் முடங்கிய சாலைகளை சீரமைப்பதையும், தடைபட்ட மின்சாரத்தை திரும்ப வழங்குவதையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பூபேந்திரா படேல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியை தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், வடமேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களுக்கு கடுமையான வானிலையை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் இன்று முதல் ஆக. 29 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆக. 30 வரை குஜராத், பாகிஸ்தான் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடற்கரைகளில் கடல் சீற்றம் முதல் மிகக் கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.