"தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்று மழை ரெட் அலர்ட்" - டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!
தமிழ்நாடு, கேரளாவிற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தும், டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது. ஈரோடு மாவட்டத்தில் 112 டிகிரி அளவுக்கு கோடை வெயின் தாக்கம் அதிகரித்து இருந்தது. வெப்ப அலை காரணரமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையும் படியுங்கள் : தொடர்மழை எச்சரிக்கை! சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை!
தென் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 20) முதல் 22-ம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை முதல் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 24-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால், அதே வேளை, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.