நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலர்ட்' - கவனமுடன் இருக்க எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு நாளை (ஆகஸ்ட் 5) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, மதுரை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இந்த 'ரெட் அலர்ட்' காரணமாக, மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.